தமிழோசை

                                                             தமிழோசை

 


தமிழோசை என்ற இப்பக்கத்தில் என்ன பகிரலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது தமிழின் சிறப்பைக்குறிக்கும் பாவேந்தரின் பாடல் நினைவில் வந்தது. இந்தப்பாடலை நான் கேட்டறிந்தது என்னுடைய நடுநிலைப்பள்ளி தமிழாசிரியரின் மூலமாகத்தான். அவர் எப்பொழுதும் எங்களுடைய பள்ளியில் நடத்தப்படும் விழாக்களுக்கு வரவேற்புரையாற்றும்போது இந்தப்பாடலைச் சொல்லித் தமிழ்வணக்கம் கூறிய பின்புதான் தன் உரையைத் தொடங்குவார். இதோ அந்தப்பாடல், "தமிழை என்னுயிர் என்பேன்" என்னும் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்பிலிருந்து...

 

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

 

இப்பாடலிற்கு விளக்கம் தரும்போது தமிழை மிகவும் சிலாகித்துச் சொல்லுவார். அந்த சிறு வயதில் தெரியவில்லை தமிழின் சுவை, ஆனால் கல்லூரியில் அடிஎடுத்துவைத்த பின்பே தெரிந்தது இப்பாடலின் சுவை. இந்தப்பாடலை மேலோட்டமாக நீங்கள் யாரேனும் படித்திருந்தால் மறுபடியும் ஒரு முறை நிதானமாக படித்துப்பாருங்கள். பிறகு, அந்த பாரதியின்தாசருக்கு நாம் அனைவரும் தாசர்களாகி விடுவோம்.


கனிச்சுளையின் சுவையும், முற்றிய கரும்பினில் ஏறிய சாறும், காய்ச்சுகின்ற பாகினில் உள்ள சுவையும், பசும்பாலும்,தென்னை மரம் தரும் குளிர்ச்சி மிகுந்த இளநீரும் என இவையனைத்தையும் இனியன என்பேன். இருந்தாலும் தமிழின் சுவையே என்னுயிர் என்பேன் கண்டீர்.

 தமிழின்சுவை உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

 

 🔔திசையாவும் ஒலிக்கட்டும் 🔔 செவியாவும் நிறைக்கட்டும் 🔔 நம் தமிழோசை🔔

 

நன்றி.

 

 

 

 

Close Menu