தமிழ் மொழியின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் 1857 ம் ஆண்டு மாயூரம்.ச.வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு 1879 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
மிகவும் பழைய நாவல் ஆயிற்றே ஆதலால் மற்ற வரலாற்று சரித்திர நாவல்களைப் போலவோ அல்லது அக்காலத்திய வாழ்க்கை முறையைப்பற்றியதாகவோ இருக்கும் என்ற என் கணிப்பை முற்றிலும் மாற்றிவிட்டது இந்நாவலின் கதைக்கரு.
அக்காலகட்டத்திய வாழ்வியல் பற்றிய வரிகள் இருப்பினும் ஆகச்சிறந்த அறச்சிந்தனைகளை எடுத்துரைக்கும் இந்நூலானது முற்போக்குச்சிந்தனைகளையும், பெண்களின் நுண்ணறிவையும், சமயோசித செயல்களையும் முன்னிறுத்துவது இதன் தனிச்சிறப்பு.
இன்றளவிலும் நம் அரசு பெண்கல்வியை வலியுறுத்திக் கொண்டிருப்பினும், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் படைக்கப்பட்ட இப்புதினத்தின் பெண் கதைமாந்தர்கள் கற்றவர்களாயும் கதையின் நாயகனைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் திகழ்வது என்னை வியப்படைய வைத்தது.
கல்வியின் முக்கியத்துவம்,பிறருக்கு உதவும் மனப்பான்மை,குடும்ப ஒற்றுமை,பெண்களின் ஆளுமை ஆகியவற்றை அவ்வப்போது நகைச்சுவை கலந்த சுவாரசியத்தோடு சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.
பல பிறமொழிச்சொற்களும் ஆஙகாங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.
நீங்கள் யாருக்கேனும் புத்தகம் பரிசளிக்க நினைத்தால் இந்நூல் நல்ல பரிசு. உங்கள் குழந்தைகள் புத்தகப்பிரியர்களாக இருந்தால் இப்புத்தகத்தை வாங்கி வாண்டுகளுடன் நீங்களும் படித்து மகிழுங்கள்.
நன்றி
Social Plugin