புன்னகை
புன்னகை ஒரு மொழி. முன்பின் பார்த்தறியாத ஒருவரிடம் பகிரும் முதல் மொழி. பேருந்துப்பயணத்தில் பக்கத்துக்கு இருக்கைகாரர்களுக்கும், அலுவலகத்தில் புதுமுகங்களுக்கும், கையசைக்கும் குழந்தைகளுக்கும் பகிரப்படும் மௌன மொழி. உங்களின் புன்னகை மொழி பிறரின் ஒரு நாளை புத்துணர்வு மிக்கதாய் மாற்றும். பிறரின் புன்னகை உங்களுக்கான புத்துணர்ச்சியை அளித்திடும். உங்களுக்கு பிறரிடம் பேச நேரமில்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் உதிர்க்கும் சிறு புன்னகை உங்களை அவர்களோடு இணைத்திருக்கும். அப்படியென்றால் அனைவரிடமும் புன்னகைக்கலாமா என்று கேட்கலாம். அனைவரிடத்தும் வரும் தயக்கம் குழந்தைகளைப் பார்க்கும்போது வருவதில்லை.
பார்க்கும் எல்லாரிடமும் புன்னகை புரிய வேண்டியதில்லை. உங்களுக்கு அறிமுகமானர்வர்களுடன் புன்னகைத்து நாளைத் துவக்குவதே போதுமானது. ஒரு பணியாளருக்குத் தேவையானது மேலாளரின் புன்னகை. அதேபோல், ஒரு மாணவனுக்கு அவனின் ஆசிரியரிடமிருந்து பெறப்படும் புன்னகை. சமயங்களில், உங்களின் இந்தப் புன்னகை அவர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலையை முடிப்பதற்கும் கூட உதவி புரியலாம். ஒரு வேளை கொடுத்த வேலையை சரியாக முடிக்காவிட்டால் நாளை எப்படி அவரைப் பார்த்து பதிலுக்கு புன்னகைக்க முடியும் என்று நினைத்து வேலையை உரிய நேரத்தில் முடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சில நேரங்களில், அலுவலகங்களில் வேலைக்குத் தடையாய் இருக்கும் சிலவற்றை உங்களிடம் மனம் திறந்து பேசுவதற்குக்கூட வாய்ப்பு இருக்கிறது. தெய்வப்புலவர் வள்ளுவப்பெருந்தகையின் வாக்கினிற்கிணங்க, நம் வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்கும் சிறு புன்னகையைப் பரிசளிக்க முயலுவோம், நம்மால் இயன்றவரை. அகம் சிறக்க முகம் மலர்வோம் தோழமைகளே!
திருக்குறள் 953
நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
மு.வ. உரை:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி,ஈகை,இனியசொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நற்பண்புகள் ஆகும்.
நன்றி.
Social Plugin