கரித்துண்டு
கரித்துண்டு நாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது இளங்கலை தமிழ் பயின்ற விடுதித்தோழி ஒருவரின் பாடத்திட்டத்தில் இந்நாவலும் அடக்கம். வெகுநாட்கள் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலிருந்தது. விடுமுறை நாள் ஒன்றில், சரி படித்துத்தான் பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள், வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் நாவலோடு ஒன்றிப்போய் அன்றே முழுதும் படித்துவிட்டேன்.
1953ஆம் ஆண்டு முனைவர்.மு.வரதராசனார் அவர்களால் எழுதப்பட்ட இந்த நாவல் சரித்திர நாவலோ, விஞ்ஞானம் சார்ந்ததோ துப்பறியும் நாவலோ அல்ல. சென்னையின் பாரிமுனையில்(இன்றைய பாரிஸ் கார்னர்) தொடங்கும் இந்நாவல் ஒரு சாமான்யனின் கையில் இருக்கும் கரித்துண்டுக்குப் பின்னாலிருப்பவற்றை சுவாரசியத்தோடு சொல்கிறது. ஒரு நடுத்தரவர்க்கம், ஒரு ஏழை, ஒரு பணக்கார வர்க்கம், முடமான கால்கள், காவல் நிலையத்தில் ஓரிரவு, வெள்ளப்பெருக்கு, ஓவியம், திருக்குறள் மற்றும் கம்யூனிசம் என நாம் எதிர்பார்க்காத திருப்பங்களை உள்ளடக்கிய இக்கதை பல முற்போக்குச் சிந்தனைகளையும் நமக்குப் பறைசாற்றுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்னால் எழுத்தப்பட்டிருந்தாலும் இந்த 21ம் நூற்றாண்டுக்கும் பொருந்தும்படியாக உள்ளது இதன் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.
எத்தனை முறை படித்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது. ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக படிக்கும்போது கிடைக்கும் சுவை தனி. நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் கரித்துண்டு நாவலை கட்டாயம் படியுங்கள் மற்றும் சுற்றத்துடன் பகிருங்கள்.
Social Plugin